பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது.;
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு நாளை (புதன்கிழமை) சென்னையில் கூட இருக்கிறது.
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்ற இருக்கிறார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர் உள்பட மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுமா?
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்றும் ஆர்வம் காட்டிவருகிறது. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் கொள்கை எதிரியாக கருதும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
அதே நேரத்தில், பா.ஜ.க.வின் நெடுநாள் வலியுறுத்தலான, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
பலத்தை காட்டிய எடப்பாடி பழனிசாமி
ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரும் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், அவரது சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் தனது பலத்தை நிரூபிப்பதற்காக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பிரமாண்ட கூட்டத்தை நடத்திக் காட்டினார்.
ஓ.பன்னீர்செல்வம் கெடு
இதற்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருக்கிறார். ஏற்கனவே, அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து வரும் 18-ந் தேதிக்குள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.
எனவே, இதுகுறித்தும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க. ஒன்றிணைந்து வலுவாக இருந்தால்தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. கருதுகிறது. அதையே எடப்பாடி பழனிசாமியிடமும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர்தான் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்.
ஆதரவாளர்கள் நம்பிக்கை
அதே நேரத்தில், கெடு விதித்த கையோடு ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று திரும்பியிருப்பதால், அவரை மட்டுமாவது அ.தி.மு.க.வில் இணைக்கும் முடிவு எடுக்கப்படும் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்புகின்றனர். எனவே, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை (புதன்கிழமை) நாளை கூட இருக்கிறது.