அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு... தேர்தல் முடிவுகள் தரும் பாடத்தை பார்த்த பிறகு அது நடக்கும் - டி.டி.வி.தினகரன் கணிப்பு
நாம் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை ஜெயலலிதாவின் தொண்டர்கள் உணர்ந்து வருகிறார்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.;
திருப்பூர்,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள். உறுதியான முடிவு எட்டப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியிடப்படும். அ.தி.மு.க.வை அடுத்த நூற்றூண்டு வரை கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து வருகிறார்கள்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அந்த தேர்தல் கற்றுக்கொடுக்கும் பாடத்திற்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட அதே சட்ட திட்டங்களுடன் கூடிய இயக்கத்தை உருவாக்குவதற்காக ஒருங்கிணைவார்கள் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.