பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு: டிடிவி தினகரன், பிரேமலதாவை இழுக்கவும் இறுதிக்கட்ட முயற்சி
தேமுதிகவை பொறுத்தவரை இன்னும் கூட்டணி முடிவை எடுத்ததாக தெரியவில்லை.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கூட்டணியை வலுப்படுத்துவதற்காக சில கட்சிகளுடன் திரை மறைவில் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.இந்த நிலையில், வரும் 23-ந் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வருகிறார். நாளை (புதன்கிழமை) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக இருக்கும் கூட்டணியில் நான் இருக்கமாட்டேன் என்று முதலில் முரண்டு பிடித்த டிடிவி தினகரன், பிறகு பாஜக தலைவர்கள் பேசிய பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. அவர் 7 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது. அதேபோல், தேமுதிகவை பொறுத்தவரை இன்னும் கூட்டணி முடிவை எடுத்ததாக தெரியவில்லை. அதிமுக, திமுக என இருபுறமும் பேசி வருவதாக கூறப்படுகிறது. பாஜகவும் அதிமுக இடம் பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தேமுதிகவையும் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நாளை பியூஷ் கோயல் சந்திப்புக்கு பிறகு அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என்று தெரிகிறது. மதுராந்தகத்தில் 23-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது நாளை (புதன்கிழமை) உறுதியானால், அக்கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் ஏறுவார்கள் என்று கூறப்படுகிறது.