குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை நெல்லை, தூத்துக்குடி போலீசார் எடுத்துக் கொண்டனர்.;
ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம்தேதி "குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளாக" அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு நேற்று (12.6.2025) தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில், தூத்துக்குடி தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி. தீபு உட்பட காவல்துறையினர்கள் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு "குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்" உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் அனைவரும், "இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி ஏற்கிறேன்" என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
நெல்லை:
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில், போலீஸ் துணை கமிஷனர்கள் கீதா (மேற்கு), வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.