குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் நெல்லை, தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா தலைமையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொறியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் அனைவரும் "இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் குழந்தைகளை ஒருபோதும் எந்தவிதமான பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்" என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, திருநெல்வேலி இயக்குதலும் பேணுதலும் மேற்பார்வை பொறியாளர் ஷீபாரெஜி மற்றும் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், இளநிலை மின் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.