சட்டசபை தேர்தல்: நாளை முதல் விருப்ப மனுக்களை பெறும் காங்கிரஸ் கட்சி

சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.;

Update:2025-12-09 19:51 IST

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே தேர்தல் ஜுரம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவ அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் சூழ்நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. வலுவான கூட்டணியுடன் களம் இறங்குகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகள்), ம.தி.மு.க. (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (6), இந்திய கம்யூனிஸ்டு (6), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), தமிழக வாழ்வுரிமை கட்சி (1), மக்கள் விடுதலை கட்சி (1), ஆதித்தமிழர் பேரவை (1), அகில இந்திய பார்வர்டு பிளாக் (1) ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண் கொண்ட தொகுதிகளில் போட்டியிட்டன.

தற்போதைய தி.மு.க. கூட்டணியில் பெரிய அளவில் ஒன்றும் மாற்றம் இல்லை. தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளே வந்திருக்கிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கொங்கு இளைஞர் பேரவையும் தி.மு.க. கூட்டணிக்கு மாற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய கட்சியான காங்கிரஸ், கடந்த தேர்தலில் (2021) 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது. அந்தக் குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்த குழுவினர் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (10-ம் தேதி) முதல் விருப்ப மனு தரலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதன்படி கட்டணமில்லா விருப்ப மனு படிவங்களை தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்தில் நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்