திருச்சி மாநகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.;

Update:2026-01-01 09:58 IST

திருச்சி,

திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், உயிர்ப்பலி வாங்கும் விபத்துகள் நடப்பதாகவும் ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பழைய பால் பண்ணை ரவுண்டானா பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் வருவதற்கு முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. மேற்படி நேரத்தில் திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி - பஞ்சப்பூர் மார்க்கத்தில் செல்ல வேண்டும். பஞ்சப்பூர்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் எல்லா இடைநில்லா பேருந்துகளும் (பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்கள்) பஞ்சப்பூர்- தஞ்சாவூர் பைபாஸ் (அரைவட்ட சுற்றுச்சாலை) மார்க்கத்தை பயன்படுத்த வேண்டும்.

திருவெறும்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு), வட்டார போக்குரத்து அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய ஒரு துணைக்குழு மேற்கண்ட நடைமுறைகளை ஆய்வு செய்து காலமுறையாக அறிக்கை அனுப்பி வைக்க ஏதுவாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்