கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கிகள் வட்டி மானியத்துடன் கடன்
கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறது. பிணையம் எதுவும் இன்றி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
வங்கிகள் வழங்கிய கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில், 2 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பண்ணை சாராத தொழில்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்காக வங்கிகள் பிரத்யேகமாக கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து தகுதியான உறுப்பினர்களும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.