தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு - தமிழகத்தில் ரூ.12.5 லட்சம் அபராதம் வசூல்

தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு - தமிழகத்தில் ரூ.12.5 லட்சம் அபராதம் வசூல்
Published on

சென்னை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சிறப்பு அமலாக்க சோதனை விவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தற்போது நடைபெற்று வரும் பண்டிகைக் காலத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் மாநிலம் தழுவிய தீவிர சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கை டிசம்பர் 2025-ன் நான்காவது வாரத்தில் தொடங்கியது. இந்த நடவடிக்கையானது அரசாணைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் ஆகியவற்றின்படி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து, பிரத்யேக அமலாக்கக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் மூலம், தெருவோர வியாபாரிகள், உள்ளூர்கடைகள், மொத்த மற்றும் சில்லறைச்சந்தைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், திருவிழா சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற போக்குவரத்து மையங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும், காவல்துறையின் ஆதரவுடன் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த அமலாக்க நடவடிக்கையின்போது, மாநிலம் முழுவதும் மொத்தம் 9,248 கடைகளில் ஆய்வுகளும் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் 2,553 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 15.56 டன் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.12,50,200 அபராதமாக விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த 2019 ஆம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 290-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைகள்/நிறுவனங்கள் மூடப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கடந்த ஆறுமாதங்களில் மட்டும் 13 தொழிற்சாலைகள்/நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தத்தடையை தவறாமல் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின், இந்த அமலாக்க நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடரும். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிக்கான தடையை திறம்படச் செயல்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com