மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் விண்ணிற்கும் மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான என்ஜின் சோதனையும் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார்.
இதுகுறித்து இஸ்ரோ நிர்வாகம் அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், பணகுடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இதேபோல் இஸ்ரோ மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.