சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டி.ஜி.பி. அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.;

Update:2025-10-14 10:57 IST

சென்னை,

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 10-ந்தேதி சென்னை துரைப்பாக்கம். சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதில், துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி கட்டிடமான சென்னை ஒன் ஐ.டி. வளாகம், சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

Advertising
Advertising

இதனையடுத்து, விரைந்து சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் ஐ.டி. நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஐ.டி.நிறுவனங்களுக்கு பணிக்கு வந்த ஊழியர்களை வீட்டிற்கு திரும்பி செல்ல நிறுவனங்கள் அறிவுறுத்தின. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும் அது வெறும் புரளி என்றும் தெரிய வந்தது.

கடந்த 11-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என தெரிய வந்தது. நேற்று முன்தினம் (கடந்த 12-ந்தேதி) சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதுவும் புரளி என தெரிய வந்தது.

இதேபோன்று, சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் டி.ராஜேந்தர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு, பின்னர் அது புரளி என தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார். அவர் யாரென்ற விவரம் தெரிய வரவில்லை. இதனை தொடர்ந்து போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டை தேடும் பணி நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்