பட்டா பெயர் மாற்ற லஞ்சம்: ரூ.20 ஆயிரத்தை நைட்டிக்குள் மறைத்தபோது சிக்கிய பெண் வி.ஏ.ஓ
முத்துலட்சுமி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம்புதூர் வி.ஏ.ஓ அலுவலகத்தில் அப்ப்குதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். அப்போது விண்ணப்பத்தை பெற்ற கிராம நிர்வாக அதிகார் முத்துலட்சுமி என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் செலவு ஆகும் என கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன், வி.ஏ.ஓ முத்துலட்சுமியிடம் பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு, நேராக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து முத்துலட்சிமியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீசார் கிருஷ்ணனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர். அவர் இன்று காலை பல்லடத்தில் உள்ள முத்து லட்சுமி வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்துலட்சுமியை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர்.
அப்போது முத்துலட்சுமி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.