சென்னை: போதைப்பொருள் வழக்கில் சினிமா நடன கலைஞர் உள்பட 12 பேர் கைது
போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 27 வயது சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை,
சென்னை அசோக் நகர் 21-வது அவென்யூ பகுதியில் இரவு நேரத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் மாறுவேடத்தில் அந்த பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையிலும், போதை மாத்திரை விற்பனையிலும் ஈடுபட்டதாக பிரவீன் (வயது 27) என்ற சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.
வடபழனியை சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கூலி படம் உள்பட பல்வேறு சினிமா படங்களில் குழு நடனம் ஆடியுள்ளார். அவரோடு அவரது நண்பர்கள் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரவீன் சினிமா பிரபலங்கள் யாருக்காவது போதைப்பொருள் விற்பனை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.