‘சென்னை கடற்கரை பண்டைய தமிழர்களின் பண்பாடுகளை உலகெங்கும் எடுத்துச் சென்றது’ - சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை மாற்றங்களை தனதாக்கிக் கொள்வதற்கு தயங்காத ஒரு பெருநகரம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-02 16:52 IST

சென்னை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்களை வழங்கினார். மருத்துவம், பொறியியல், மேலாண்மைத்துறை, வணிகவியல் துறை, இணையவழி கல்வித்துறை உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த 5084 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் 26 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர். இந்த விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;-

“ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும், தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், கன்னட புத்தாண்டு அல்லது தெலுங்கு யுகாதியாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொள்வது நமக்கு மிகுந்த ஊக்கத்தை தருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் இனிய 2026 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை என்பது பாரம்பரியத்திற்கு சொந்தமான இடம். பழமையான கலாசாரத்தை போற்றுகின்ற நேரத்தில் புதிய மாற்றங்களையும் தனதாக்கிக் கொள்வதற்கு தயங்காத ஒரு பெருநகரம். தொண்டை மண்டலத்தின் தலைநகராக ஒரு காலத்தில் சென்னை இருந்தது. இந்த சென்னை கடற்கரைதான் பண்டைய தமிழர்களின் பண்பாடுகளை உலகெங்கும் எடுத்துச் சென்றது.

தமிழர்கள் ரோமானிய அரசுடன் வணிகம் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால், இங்கிருந்து பண்டைய தமிழர்கள் ரோமானிய பேரரசுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இன்று பட்டம் பெறும் மாணவர்கள் இனிமேல்தான் புதிய வாழ்க்கையை துவங்கப்போகிறார்கள். பல்கலைக்கழகத்தில் நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் போட்டி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்திருப்போம். ஆனால் வெளிஉலகம் என்பது பூக்களால் மட்டுமே நிரம்பியிருக்காது. ஒவ்வொரு மனிதரும் கடினமான நேரங்களை சந்தித்துதான் ஆக வேண்டும்.

இரவரையும், பகலையும் போல் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரக்கூடியது என்பதை நாம் உணர வேண்டும். காலையில் உதிக்கும் சூரியன், மாலையில் மறைந்துவிடும் என்பது யதார்த்தம். அதுபோல் எந்தவொரு மனிதரின் வாழ்க்கையும் விடியலை மட்டுமே சுவைத்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

வெற்றி பெறும்போது அகங்காரம் கொள்ளக் கூடாது. தோல்வியடையும்போது துவண்டுவிடக் கூடாது. வெற்றியை விட தோல்விதான் ஒரு மனிதனுக்கு அதிக அனுபவத்தை தருகிறது. எதையும் தாங்கும் மனஉறுதி நம்மிடம் இருக்க வேண்டும்.

2047-ல் இந்திய தேசம் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக, மிகப்பெரிய பொருளாதார ஆளுமையாக வரவேண்டும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதை ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் சொல்லியிருந்தால், அதை நம்புகிறவர்களை விட நகைப்பவர்கள்தான் அதிகமாக இருந்திருப்பார்கள்.

ஆனால் எங்கோ இருந்த நாம் இன்று உலகின் மிகப்பெரிய 5-வது பொருளாதார நாடாக உருவாகி, 3-வது இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்றைய இளைய சமுதாயத்தை பார்க்கும்போது, 2047-க்கு முன்பாகவே இந்தியா பல்வேறு துறைகளில் இந்தியா உலகத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்