‘சென்னை உலா' பேருந்து சேவை தொடங்கியது - பொதுமக்கள் வரவேற்பு

பாரம்பரியமிக்க இடங்களை பார்க்கும் வகையிலான ‘சென்னை உலா’ பேருந்து சேவை நேற்று தொடங்கியது.;

Update:2026-01-18 03:39 IST

சென்னை நகரத்தை சுற்றிபார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ‘சென்னை உலா' பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 14-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் பயன்படுத்திய பாரம்பரியமிக்க பேருந்துகளை போன்று 5 பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு சென்னை உலா பேருந்துகளாக நேற்று முதல் சேவையை தொடங்கின.

இந்த பேருந்துகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம், தலைமைச் செயலகம், சென்னை ஐகோர்ட்டு, பல்லவன் இல்லம் வழியாக மீண்டும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

இந்த பேருந்தில் ரூ.50 டிக்கெட் எடுத்துக் கொண்டு நாள் முழுவதும் மேலே உள்ள எந்த இடத்திலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஏறி மற்றொரு இடத்தில் இறங்குவதாக மட்டும் இருந்தால் அதற்காக டீலக்ஸ் பஸ் கட்டண அடிப்படையில் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். ½ மணி நேர இடைவெளியில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

நேற்று தொடங்கிய இந்த பேருந்துகளில் மக்கள் உற்சாகமாக பயணித்தனர். இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். 50 ரூபாயில் சென்னையின் பாரம்பரியம் மிக்க கலாசார இடங்களை சுற்றிப்பார்ப்பது என்பது சிக்கனமான பொழுதுபோக்காக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த புதிய பேருந்து சேவை குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘சென்னை உலா பேருந்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 18-ந்தேதி (இன்று) முழுநேரம் இயக்கப்படும். 19-ந்தேதியில் (நாளை) இருந்து மாலை 4 மணி முதல் இயக்கப்படும். காலை முதலே இந்த பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’ என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்