ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வேலூரில் இன்று மினி டைடல் பூங்காவினை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.;

Update:2025-11-05 14:27 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், வேலூரில் ரூ.32 கோடி செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள்

2000-ஆம் ஆண்டில் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை, தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.

‘அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி’ என்ற தமிழ்நாடு அரசின் முக்கிய கொள்கையின்படி, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதிய டைடல் பூங்காக்களை நிறுவ முதல்-அமைச்சரால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இவற்றின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதல்-அமைச்சரால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்து, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு, அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற, விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும், திருப்பூர் மினி டைடல் பூங்கா 11.08.2025 அன்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டன.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 01.08.2025 அன்று முதல்-அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்குடி மினி டைடல் பூங்காவின் கட்டுமானப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.

இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை விழுப்புரம் மினி டைடல் பூங்கா, சேலம் மினி டைடல் பூங்கா, தூத்துக்குடி மினி டைடல் பூங்கா, திருப்பூர் மினி டைடல் பூங்கா, தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா மற்றும் பட்டாபிராம் டைடல் பூங்கா ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மினி டைடல் பூங்கா திறந்து வைத்தல் மற்றும் நாமக்கல் மினி டைடல் பூங்கா அடிக்கல் நாட்டுதல்

முதல்-அமைச்சரால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்கா ரூ.32 கோடி செலவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், 60,000 சதுர அடி கட்டுமான பரப்பளவில், 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்-அமைச்சரால் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மினி டைடல் பூங்கா 63,200 சதுர அடி கட்டுமானப் பரப்பளவில் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியின்போது, வேலூர் மினி டைடல் பூங்காவினை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள (M/s. AGS Health care) நிறுவனத்திற்கு தள ஒதுக்கீட்டு ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதுடன் அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சி பெறவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்