முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.773 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.;
திருச்சி,
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். சென்னையில் இருந்து விமான மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் செல்கிறார். அங்கு மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் அரசு விழாவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதில் ரூ. 201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 223 கோடியே 6லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.348 கோடியே 43 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ. 773 கோடியே 19 லட்சம் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது முதியோர்களுக்கான பிரத்யேக பகல் நேர பராமரிப்பு மையமாகும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் தனியாக இருக்கும் முதியவர்கள் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.இந்த மையங்களில் அவர்களுக்கு காலையில் டீ ஸ்னாக்ஸ், மதிய உணவு, மாலையில் டீ, காபி வழங்கப்படுகிறது. மேலும் அவரவர் சூழலுக்கு ஏற்ப கவுன்சிலிங் மற்றும் கேரம் போர்டு போன்ற பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
தமிழக முழுவதும் 25-க்கும் மேற்பட்ட அன்புச் சோலை மையங்களை அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கொட்டப்பட்டிலிருந்து தொடங்கி வைக்கிறார். திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை பகுதியிலும் மற்றொரு மையம் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதியம் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் இரவு 12 மணி வரை திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.