5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

அதன்படி நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. இதையடுத்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு செல்கிறார். அவர், சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டிக்கு வரும் வழியில் கோத்தகிரி, கட்டப்பெட்டு உள்ளிட்ட இடங்களில் கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். மேலும் பழங்குடியின மக்களை சந்தித்து பேச உள்ளார். வருகிற 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார்.

இதையடுத்து 16-ந் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com