வறட்சியால் வெளியேறிய மக்கள்... கிறிஸ்துமஸ் கொண்டாட ஊர் திரும்பும் கிறிஸ்தவர்கள் - சிவகங்கையில் நெகிழ்ச்சி
கிராமத்தில் உள்ள தூய சவேரியார் தேவாலயத்தில் ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி திருவிழா நடைபெறுகிறது.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் குமிழன்தாவு கிராமத்தை சேர்ந்த மக்கள், கடந்த 1997-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக ஒட்டுமொத்த கிராமத்தையும் காலி செய்துவிட்டு, பிழைப்பு தேடி வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இருப்பினும் அந்த கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தங்கள் சொந்த கிராமத்திற்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த கிராமத்தில் உள்ள தூய சவேரியார் தேவாலயத்தில் ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் குமிழன்தாவு கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கிராமத்தை விட்டு முழுவதுமாக வெளியேறினாலும், கிறிஸ்துமஸ் காலத்தில் கிராம மக்கள் ஊர் திரும்பும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.