கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: கைதான 3 பேருக்கு கொலையிலும் தொடர்பு

மாணவி கூட்டுப் பலாத்காரம் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மூவரையும் ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்;

Update:2025-12-02 21:57 IST

 கோவை,

கோவை விமான நிலையம் அருகே கடந்த மாதம் 2ஆம் தேதி இரவு, காரில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூவர் கும்பல் காதலனை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் சிவகங்கையைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ் (வயது 30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (28), மற்றும் உறவினரான தவசி என்ற குணா ஆகியோரை துடியலூர் பகுதியில் தப்பியோட முயன்றபோது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயம் அடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்ததும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான மூவரையும் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், மாணவி கூட்டுப் பலாத்காரம் வழக்கில் கைதான குற்றவாளிகள் மூவரும் சேர்ந்து செரயாம்பாளையம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியையும் அடித்து கொன்ற திடுக்கிடும் தகவல் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் அருகே உள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (55). இவர் அன்னூர் அடுத்த பச்சாபாளையத்தில் ஆடுகளை மேய்த்து வந்தார்.

கடந்த 2ஆம் தேதி தேவராஜ் செரயாம்பாளையம் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதன்போது அங்கு மாணவி கூட்டுப் பலாத்காரம் வழக்கில் கைதாகியுள்ள சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகியோர் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக அவர்கள் அங்கேயே அமர்ந்து மது குடித்ததை தேவராஜ் பார்த்தார். உடனே அவர் அங்கு சென்று, “ஏன் இங்கு நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்று தட்டிக் கேட்டார்.

இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மூவரும் சேர்ந்து தேவராஜை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். தாக்குதலால் தேவராஜ் மயக்கம் அடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். காட்டுப் பகுதி என்பதால் யாருக்கும் இது தெரியவில்லை.

கடந்த 2ஆம் தேதி காலை ஆடுகளை மேய்க்கச் சென்ற தேவராஜ் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். சில நாட்கள் கழித்து தேவராஜ் செரயாம்பாளையம் காட்டுப் பகுதியில் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கோவில்பாளையம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, சந்தேக மரணம் என விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இந்தக் கொலையில் மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான தகவலை கோவை மாநகர போலீசார், கோவை மாவட்ட போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவி கூட்டுப் பலாத்காரம் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மூவரையும் ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக காவல் விசாரணைக்காக கோவில்பாளையம் போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்