சபரிமலையில் கோவை பக்தர் உயிரிழப்பு
சபரிமலையில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.;
கோவை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி மண்டல சீசன் தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு வழிபாடும் நடக்கிறது.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது உடனடி தரிசன முன்பதிவு என்ற அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சபரிமலையில் கடந்த 10 நாட்களில் 9 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனிடையே அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முழுமையாக முடிந்து விட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்களுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மகரவிளக்கை முன்னிட்டு ஜனவரி 10-ந்தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம்) தற்போது நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சபரிமலை யாத்திரை மேற்கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.