கோவை சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை? - நயினார் நாகேந்திரன் கண்டனம்
நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சில தினங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கடுமையான பாதிப்பிற்குள்ளான அந்தப் பெண் உடலளவிலும் மனதளவிலும் விரைவில் மீண்டு வர வேண்டுமென நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் E.R. ஈஸ்வரனோ, “விளக்கு இல்லாத இடத்தில் இரவு நேரத்தில் அந்தப் பெண் எதற்காக ஒரு ஆணுடன் அங்கே சென்றாள்? வளர்ப்பு சரியில்லை” என்று தரக்குறைவாக பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சித்துள்ளார்.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, ஏற்கனவே கடும் மன உளைச்சலில் இருக்கும் அந்தப் பெண்ணிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனம் எவ்வளவு பெரிய மனக்கவலையைத் தரும்? பெண்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க முடியாத தமது கூட்டணிக் கட்சியான திமுகவைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை?
பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் மனிதாபிமானமற்ற தமது கூட்டணிக் கட்சித் தலைவரின் இந்தக் கருத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆமோதிக்கிறாரா? அல்லது முதல்வரின் கருத்தைத் தான் ஈஸ்வரன் பிரதிபலிக்கிறாரா?
நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எதிர்க்கட்சியினர் பேச வேண்டும்! நரம்பில்லாத நாக்கினால் பாதிக்கப்பட்ட பெண்களை குத்தி கிழிப்பதை இனியாவது திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.