ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் எனக்கூறி கல்லூரி பேராசிரியையிடம் ரூ.11.46 லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி பேராசிரியையிடம் ரூ.11.46 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.;
கோப்புப்படம்
வேலூர் காட்பாடி தாலுகா பிரம்மபுரத்தை சேர்ந்த 37 வயது பெண், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஒரு பதிவு வந்தது. பேராசிரியை அந்த இணைப்பை (லிங்க்) திறந்து ஆன்லைன் முதலீடு தொடர்பான விவரங்களை பார்த்தார்.
சிறிதுநேரத்தில் அவருடைய செல்போன் எண் ‘வென்ட்செக் புரோ' என்ற வாட்ஸ்-அப் குரூப்பில் இணைக்கப்பட்டது. அதில் இருந்த நபர்கள் ஆன்லைனில் முதலீடு செய்வது பற்றியும், அதனால் கிடைக்கும் லாபம் தொடர்பான தகவல்களையும், அவர்கள் பெற்ற லாபம் குறித்தும் அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்டனர்.
இதனை உண்மை என்று நம்பிய பேராசிரியை கடந்த மாதம் 21-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் மர்மநபர்கள் பதிவிட்டிருந்த ஆன்லைன் கணக்கில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் முதலீடு செய்தார். அதற்கு சுமார் ரூ.1½ லட்சம் கமிஷன் வந்துள்ளதாக அவரின் கணக்கில் காண்பித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் முதலீடு செய்த பணம் மற்றும் கமிஷனை எடுக்க முயன்றார். ஆனால் அவரால் அதனை எடுக்க முடியவில்லை.
இதுபற்றி அவர் வாட்ஸ்-அப் குரூப்பில் கேட்டதற்கு, மேலும் கூடுதல் பணம் முதலீடு செய்தால்தான் அவற்றை திரும்ப எடுக்க முடியும் என்று அந்த குரூப்பில் இருந்த நபர்கள் தெரிவித்தனர். அதனால் சந்தேகம் அடைந்த பேராசிரியை இதுகுறித்து நண்பர்களிடம் விசாரித்தபோது தான் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மர்மநபர்கள் ரூ.11 லட்சத்து 46 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் ஆன்லைனில் பகுதிநேர வேலை, பங்குசந்தையில் முதலீடு, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.