சர்ச்சை பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து
ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருந்தார்.;
சென்னை,
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகளை காவல் துறை கைது செய்து வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கரூர் துயர சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கிவிட்டார்.
ஆனால் இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா தரப்பில், எக்ஸ் தள பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டு விட்டது. பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்படாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு நீக்கப்படவில்லை என்றாலும் கூட, வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. ஆதவ் அர்ஜுனா குற்றப்பின்னணி கொண்டவர் அல்ல. எதிர்கட்சி என்ற அடிப்படையில் கோபமாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளார் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், செப்டம்பர் 27-ம் தேதி கூட்ட நெரிசல் நடந்த பின் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா தப்பியோடி விட்டார். 28-ம் தேதி நள்ளிரவு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுசம்பந்தமாக காவல்துறைக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது.
மெசேஜ்களை பார்வேடு செய்தாலே குற்றம் என தீர்ப்புகள் உள்ளன. விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியும், ஆதவ் அர்ஜுனா ஆஜராகவில்லை. நேபாளத்திலும், இலங்கையிலும் ஆட்சியை கவிழ்த்த புரட்சியைக் குறிப்பிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து பதிவிட்டுள்ளார் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜுனா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.