சண்டையை சமரசம் செய்ய சென்ற கிரிக்கெட் வீரர் படுகொலை; ஒரே குடும்பத்தின் 3 பேர் வெறிச்செயல்
காரில் வந்த பிரபுதேவன் என்பவர், குமார் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது காரை கொண்டு மோதுவதுபோல் சென்றார் என கூறப்படுகிறது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல்நிலவூர் கிராம பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் ஆண்டி (வயது 36). கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை வென்றுள்ளார்.
விவசாய பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய மனைவி சிந்தாமணி (வயது 28). இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஆண்டியின் தம்பி குமார் மற்றும் அதே ஊரை சேர்ந்த ராம்ராஜ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் எருக்கம்பட்டு பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே காரில் வந்த அதே கிராம பகுதியை சேர்ந்தவரான அழகேசன் மகன் பிரபுதேவன் என்பவர், குமார் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதுவதுபோல் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பிரபுதேவன் ஊருக்கு வந்ததும், அவரிடம் குமாரும், ராம்ராஜூம் காரில் மோதுவதுபோல் ஏன் வந்தாய்? என்று கேட்டுள்ளனர். அதற்கு பிரபுதேவன் அவர்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், அன்று இரவு 7 மணியளவில் குமார் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரபுதேவன், அவரது தந்தை அழகேசன், தாய் வெள்ளி ஆகியோர் குமாரை தாக்கியுள்ளனர். இதைபார்த்த குமாரின் அண்ணன் ஆண்டி அவர்களை தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் ஆத்திரம் தீராத பிரபுதேவன் மற்றும் அவருடைய பெற்றோர் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து ஆண்டியின் தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆண்டி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பிரபுதேவன் மற்றும் அவருடைய பெற்றோர் என 3 பேரையும் தேடி வருகின்றனர்.