பெரியார்,அண்ணா மீதான விமர்சனம்; ராஜேந்திர பாலாஜி வருத்தம்

அண்ணா இல்லையெனில் என்னைப்போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.;

Update:2025-06-23 13:07 IST

மதுரை,

மதுரையில் நேற்று இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதவிரபாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்று அதிமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக தனது கொள்கை தலைவர்களாக கொண்டிருக்கும் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் விமர்சிக்கப்பட்டு இருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினரை மேடையில் வைத்துக்கொண்டே அண்ணா பற்றிய விமர்சன வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மதுரையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார்,அண்ணாவை விமர்சித்த வீடியோ ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. தலைவர்களை சிறுமைப்படுத்தும் நிகழ்வாக பயன்படுத்தியது தவறு. அவை நாகரிகம் கருதி எதிர்க்கவில்லை.

ஆன்மீக விழாவில் அண்ணாவை விமர்சிக்கும் கருத்துகள் தேவையற்றவை. அண்ணா இல்லையெனில் என்னைப்போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. முருக பக்தர்கள் மாநாடு திமுகவுக்கு பயத்தை கொடுத்துள்ளது. திமுகவை வெல்ல அதிமுகவால் மட்டுமே முடியும். பழனிசாமியோடு விஜய் கைகோர்க்க வேண்டும்.

திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என எண்ணுகிற தலைவர்களில் விஜய்யும் ஒருவர். அதிமுகவோடும், பழனசாமியோடும் கைகோர்ப்பதுதான் விஜய் எடுக்கும் சிறந்த முடிவு. திமுகவுடன் மனதளவில் உறவை முறித்த திருமாவளவன் பெயரளவில் மட்டுமே கூட்டணியில் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்