திமுக மகளிரணி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக ரெடியாகும் கமகம அசைவ விருந்து

மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக மகளிரணி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக ரெடியாகும் கமகம அசைவ விருந்து
Published on

திருப்பூர்,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. தனது அனைத்து அணிகளையும் களத்தில் இறக்கி மக்களுடனான தொடர்பை பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே திருவண்ணாமலையில் வடக்கு மண்டல தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மற்ற மண்டலங்களிலும் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. அரசின் நலத்திட்டங்களை விளக்கியும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கூட்டங்கள் மாநாடு போல் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்காக 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்து பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி உள்ளிட்ட ஏராளமான மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவும், சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மகளிர் அணியினர் திறம்பட செயலாற்றும் வகையிலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரனம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்குகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றுப் பேசுகிறார். முடிவில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றி கூறுகிறார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மகளிர் அணியினர் இதில் பங்கேற்கின்றனர். 12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 15 பேர் வீதம், மொத்தம் சுமார் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவியத் தொடங்கினர்.

மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான உணவு தயாரிக்கும் பணிகள், மாநாட்டு திடல் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றன. சிக்கன் பிரியாணி தயாரித்து, சிறிய டப்பாக்களில் அடைத்து மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,500-க்கும் மேற்பட்டோர் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பார்சல் செய்யப்பட்ட உணவுகள், மண்டல வாரியாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கே கொண்டு சென்று வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்க வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்காங்கே குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறைகள் உள்ளிட்டவையும் தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கட்சியினர் அமரும் நாற்காலிகளில் குடிநீர் பாட்டில், பிஸ்கட், கடலை மிட்டாய், குளிர்பானம், நொறுக்குத்தீனி ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com