டிஜிட்டல் கைது: பத்மபூஷன் விருது பெற்ற முன்னாள் ஐ.ஐ.டி. விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் மோசடி

ராமசாமியை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், அவர் யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது என்றும் மோசடிக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.;

Update:2025-12-14 16:55 IST

சென்னை,

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பத்மபூஷன் விருது பெற்ற முன்னாள் ஐ.ஐ.டி. விஞ்ஞானியிடம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் ரூ.57 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி ராமசாமி(வயது 77), தற்போது மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு வகுப்பு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் ராமசாமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ராமசாமியின் செல்போன் எண் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் பயந்துபோன ராமசாமி, மோசடிக்காரர்கள் கேட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். சுமார் 3 மணி நேரம் அவரை டிஜிட்டல் கைது செய்து வைத்திருந்த மோசடிக்காரர்கள், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பணத்தை நாங்கள் மீண்டும் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் இது ஒரு மோசடி செயல் என்பதை அறிந்த ராமசாமி, இது குறித்து குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்