பொங்கல் விழாவில் தகராறு: டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை
பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் கோட்டார் சரலூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40 வயது), டெம்போ டிரைவர். இவரும், இவரது நண்பர் மணிகண்டன் (29 வயது) மற்றும் சிலர் சேர்ந்து சரலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஊர்மக்கள் நடத்திய பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த செந்தூரான் நகரைச் சோ்ந்த தொழிலாளி முகேஷ் கண்ணன் (26 வயது) என்பவருக்கும், ரமேஷ் தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதைப் பார்த்த ஊர்மக்கள் மற்றும் போலீசார் முகேஷ் கண்ணனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து முகேஷ் கண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு ரமேசும், மணிகண்டனும் தங்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் முகேஷ் கண்ணன் வீட்டின் அருகே சென்றபோது மீண்டும் ரமேஷ் தரப்புக்கும், முகேஷ் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த முகேஷ் கண்ணன் வீட்டுக்குள் சென்று அரிவாளுடன் வெளியே வந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேசும், மணிகண்டனும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் முகேஷ் கண்ணன் அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இந்த பயங்கர தாக்குதலில் தலை, கழுத்து போன்ற இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டனுக்கு கை, தலை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது.
தகவலறிந்து வந்த கோட்டார் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரமேஷின் சகோதரர் சுரேஷ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்தனர். ரமேசும், மணிகண்டனும் மது போதையில் தன்னிடம் தகராறு செய்ததால் அவர்களை வெட்டியதாக முகேஷ் கண்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.