கடந்த கால சாதனைகளை முறியடித்த தீபாவளி மது விற்பனை.. முதலிடத்தில் இந்த மண்டலமா..?

தீபாவளி மது விற்பனை ரூ.790 கோடியை தொட்டு இருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு நடந்த விற்பனை ஆகும்.;

Update:2025-10-22 05:07 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் எந்த பண்டிகை என்றாலும், அதில் மது விற்பனை என்பது மிக அமோகமாக நடக்கிறது. எந்த பண்டிகை என்றாலும் எங்களுக்கு மதுதான் முக்கியம் என்ற ரீதியில் மதுபிரியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே ஒவ்வொரு பண்டிகையின்போதும் மது விற்பனை உச்சத்தை தொடுகிறது. கடந்த 1-ந்தேதி ஆயுத பூஜை தினத்தில் கூட மது விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.240 கோடியை தொட்டது.

இந்நிலையில் கடந்த கால அனைத்து சாதனைகளையும் முறியடித்து தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன்படி மொத்த விற்பனை ரூ.790 கோடிக்கு நடந்துள்ளது. இதுவரை எந்த பண்டிகை காலத்திலும் இந்த அளவுக்கு மது விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது.

முதலிடத்தில்..

தமிழ்நாட்டில் 4,777 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடி வரை விற்பனை இருக்கும். விடுமுறை தினம் மற்றும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ரூ.170 முதல் ரூ.180 கோடி வரை விற்பனை இருக்கும். அதுவே, பண்டிகை காலங்களில் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை ரூ.490 கோடிக்கு இருந்தது. எனவே இந்தாண்டு விற்பனை ரூ.600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்து இருக்கிறது.

கடந்த 18-ந்தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்துக்கும், 19-ந்தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்துக்கும், தீபாவளியான 20-ந்தேதி ரூ.266 கோடியே 6 லட்சத்துக்கும் என மொத்தமாக 3 நாட்களில் ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு விற்பனை நடந்து இருக்கிறது.

இந்த 3 நாட்களில் மண்டல வாரியாக விற்பனையை பார்த்தால் மதுரைதான் முதலிடம் பிடித்து இருக்கிறது. மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சமும், சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியே 31 லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியே 34 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியே 31 லட்சத்துக்கும் மது விற்பனை நடந்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்