சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு தவறிவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்
காவல் துறையை தி.மு.க. அரசு செயலிழக்க வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.;
சென்னை,
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”வன்முறையின் வாழ்விடம் தமிழ்நாடு"" என்று சொல்லும் அளவுக்கு கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கடத்தல், பதுக்கல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டே செல்கிறது. இதனை நிரூபிக்கும் வகையில், கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு பின்புறம் நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருக்கிறது.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பின்புறம் சட்டக் கல்வி பயிலும் மாணவி தனது நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரை மயக்கமடையச் செய்துவிட்டு சட்டக் கல்வி பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், மயக்க நிலையில் இருந்த ஆண் நண்பர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நடமாட முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீரழிந்துள்ளது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.
தமிழ்நாட்டில் இதுபோன்று வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு காவலர்கள் பற்றாக்குறை, காவல் துறையினருக்கான வசதிகள் இல்லாமை, ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது, அரசியல் தலையீடு போன்றவை காரணங்களாக இருக்கின்றன. பல நேர்வுகளில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இது தவிர, பல வழக்குகளை விரைந்து முடித்து தண்டனைப் பெற்றுத் தராததும் வன்முறையாளர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது. கருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் காவல் துறை இருந்தால் சட்டம் ஒழுங்கு என்பது நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டேதான் செல்லும். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகின்ற நிலையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்பது நகைப்புக்குரியதுதான். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு தவறிவிட்டது. காவல் துறையை செயலிழக்க வைத்துள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று இருக்கின்ற இந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையில் தீவிரக் கவனம் செலுத்தி, மேற்படி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.