‘தமிழகத்தில் தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது’ - மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால்

தமிழகத்தில் வளர்ச்சி தேக்கமடைந்து ஊழல் அதிகரித்துள்ளது என அர்ஜுன் ராம் மேக்வால் விமர்சித்துள்ளார்.;

Update:2025-12-31 15:10 IST

புதுடெல்லி,

தமிழகத்தில் தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என மத்திய மந்திரியும், பா.ஜ.க.வின் தமிழ்நாடு தேர்தல் இணைப் பொறுப்பாளருமான அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-

“தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு நிலவுகிறது. நல்லாட்சியை வழங்குவதாக வாக்குறுதி அளித்து அவர்கள் ஆட்சிக்கு வந்தனர், ஆனால் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தி.மு.க. அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது, ஊழல் அதிகரித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்போது, ​​தமிழ்நாட்டில் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும், நல்லாட்சி நிலவும், மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நான் மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் தமிழகம் சென்றேன். அங்கு எஸ்.ஐ.ஆர். நடைமுறை பற்றிய தகவல்களை சேகரித்தேன். எஸ்.ஐ.ஆர். பணிகள் அங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.ஐ.அர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அப்போது தி.மு.க. அரசு காங்கிரஸ் கூட்டணியில்தான் இருந்தது. இது முதல் முறையாக நடக்கும் நடைமுறை இல்லை. இது வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான ஒரு செயல்முறையாகும். எஸ்.ஐ.அர். மீதான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் விமர்சனத்திற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் முன்பு ஜவஹர் ரோஸ்கர் யோஜனா என்று இருந்தது. அந்த பெயரை காங்கிரஸ் மாற்றவில்லையா?

வேலைவாய்ப்புத் திட்டங்களின் பெயர்கள் இதற்கு முன்பு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை, நாங்கள் களத்தில் இறங்கி ஆய்வு செய்தபோது 100 நாள் வேலை திட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது தெரியவந்தது. அதனால் அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்