‘தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் வி.சி.க.வை விமர்சிப்பதை நிறுத்தி விடுவார்கள்’ - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லை என்பதுதான் விமர்சனங்களுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறிவிட்டால், அதன் பிறகு யாரும் நம்மைப் பற்றி விமர்சனம் செய்து பேச மாட்டார்கள். நாம் அவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்கமாட்டோம். அவர்களின் வேலை முடிந்துவிடும், அவர்களின் செயல்திட்டம் நிறைவேறிவிடும்.
நம் மீது இத்தனை விமர்சனங்கள் வருவதற்கு காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லையே, பா.ஜ.க.வோடு உறவாடவில்லையே, பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் திரும்பத் திரும்ப விமர்சனம் செய்யக் கூடிய ஆளாக திருமாவளவன் இருக்கிறாரே, சனாதன எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறாரே, தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவர் உற்ற துணையாக இருக்கிறாரே என்பதுதான். இதுதான் அவர்களின் பிரச்சினை.”
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.