ரெயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-06-25 12:06 IST

ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டும் வரும் ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்தநிலையில், இதோடு சேர்த்து நீண்ட தூர ரெயில் பயணங்களுக்கான ரெயில் டிக்கெட் விலையை உயர்த்தி ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ரெயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடியையும், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவையும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரெயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியையும், மந்திரி அஸ்வினி வைஷ்ணவையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…

ஏ.சி. பெட்டிகளை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரெயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இந்திய ரெயில்வே வெறும் சேவை மட்டுமல்ல - அது ஒரு குடும்பம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்