‘கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது’ - கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தல்
காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்டுப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி டெல்லியில் உள்ள இந்திரா பவனில் இன்று மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியில் சிலர் குரல் எழுப்பிய நிலையிலும், ஜனநாயகன் விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையிலும் இந்த கூட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தி.மு.க. உடனான கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப் பெறுவது, ஆட்சியில் பங்கு, பரப்புரை உத்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற உயர்நிலை கூட்டம் சற்று முன்னர் நிறைவு பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது” என கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்டுப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவான விவாதம் நடைபெற்றது. அனைத்து கருத்துகளும் பொறுமையாக கருத்து கேட்கப்பட்டது. கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப கூட்டணி இருக்கும்” என்று தெரிவித்தார்.