காதல் திருமணத்தால் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை

குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.;

Update:2025-01-29 18:27 IST

கோவை,

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், கடந்த 2019ம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் - வர்ஷினி பிரியா ஆகியோரை கொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் வினோத்குமார் குற்றவாளி என்று கோவை எஸ்.சி.,எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. கொலை வழக்கில் கைதான நான்கு பேரில் மூன்று (கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ்) பேர் விடுவிக்கப்படுவதாகவும், ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஜன., 29ம் தேதி) வெளியிடப்படும் என்றும் கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இரட்டை ஆணவப் படுகொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த வினோத்குமாருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கப்படலாம் என்பதால், தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்த இரட்டைகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானி மோகன், "இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் வினோத் திட்டமிட்டே ஆயுதத்துடன் அத்துமீறி வீட்டிற்குள்ளே நுழைந்து, சாதியை குறிப்பிட்டு கடுமையாக பேசி கொடூரமாக தாக்கி உள்ளார், தடுக்க வந்த வர்ஷினியையும் அவர் தாக்கி உள்ளார். இந்த வழக்கில் வினோத்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கி உள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்றும் திட்டமிட்டு நடக்கவில்லை என்றும் குறிப்பிட்ட, குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் சசிகுமார், வினோத் குமார் தனது தம்பி கனகராஜை தாக்கும்பொது, தடுக்க வந்த வர்ஷினி பிரியாவை எதிர்பாராத விதமாகவே தாக்கினார் என்றும், அவர் வர்ஷினி பிரியாவை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்பதால் இதை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்றும், இதனால் வினோத் குமாருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறுகையில், "தனது உடன்பிறந்த சகோதரரையே பட்டியலின சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்காக படுகொலை செய்தது, சாதிய வன்மத்தை வெளிக்காட்டுகிறது. வினோத் குமாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் இன்றளவும் சாதிய வன்கொடுமை இருக்கும் நிலையில், இரட்டைப் படுகொலை செய்த குற்றவாளி வினோத் குமாருக்கு, இறுதி மூச்சு வரை எந்த சலுகையும் இன்றி சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்க வேண்டும். இனி வன்கொடுமை நடைபெறாத வண்ணம் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்று அவர் வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து, இன்று மாலை தீர்ப்பை வாசித்த நீதிபதி விவேகானந்தன், வினோத் குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்