யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி - ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பயனடைவார்கள்.;
கோப்புப்படம்
சென்னை,
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறுகின்றனர். இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் தங்களுடைய தொகையை யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது. இதற்கான பணிகளை தொழிலாளர் அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பயனடைவார்கள். தற்போது வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பணத்தை பெற ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், அந்த நடைமுறை தேவையற்றதாக ஆகிறது. புதிய முறைப்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், கணக்கில் இருந்து பெறத் தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்ய, யுபிஐ பின் பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் மூலமாகவோ, ஏடிஎம் மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தை சீராக செயல்படுத்த, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தங்களது மென்பொருள் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து வருகிறது. தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகள் தீர்வு காணப்படுகின்றன. இந்த நடைமுறை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு கூடுதல் நிர்வாக சுமையை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்கவே, நேரடி பணப்பரிமாற்ற முறை உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய மாற்றம், வருங்கால உறுப்பினர்களின் வாழ்க்கை எளிமையாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு இணையான சேவைகளை வழங்கும் அமைப்பாக வருங்கால வைப்பு நிதியை மேம்படுத்துவதற்கான முக்கிய பணியாக இந்த யுபிஐ மூலம் நேரடி பணம் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.