ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்த விவசாயி - போக்சோவில் கைது
45 வயது நபர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.;
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது 3 மகள்களுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி செம்பிரான்குளம் கிராமத்துக்கு வந்தனர். அங்கேயே தங்கி அவர்கள் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி அந்த தம்பதியின் மூத்த மகளான 17 வயது சிறுமி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
விசாரணையில், செம்பிரான்குளத்தை சேர்ந்த விவசாயியான தோப்படியான் (45 வயது) என்பவர் மாயமான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தோப்படியானை கைது செய்தனர்.