தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.;
தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும், பயிர்களை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களை வைத்து விரட்டி அடிக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்புராஜ், மாவட்ட தலைவர்கள் நடராஜன், வெள்ளத்துரை, பாண்டி, செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி, தென்காசி மாவட்ட தலைவர் தாமோதரன் கோவில்பட்டி வட்டாரத் தலைவர் வெங்கடாசலபதி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட சுமார் 120 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் விவசாயிகளிடம் வனத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடும் நிவாரணம் மற்றும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்றும் போராட்டம் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.