1-14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாட்டிலேயே தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெறும் 16வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தபின் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கடந்த நிதிநிலை அறிக்கையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இளம்பெண்களை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீட்க, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்காத முயற்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்தார்.
பல்வேறு நாடுகள் புற்றுநோயை தடுப்பூசி மூலம் குணப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புற்றுநோய் தொடர்பான திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
புற்றுநோய் தடுப்பூசிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிந்த பின்னர், இந்த திட்டம் அமலுக்கு வரும். தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.15,000 வரை செலவாகிறது. எனவே, புற்றுநோய் தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களும் செலுத்திக் கொள்ளும் வகையில், இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. விரைல் இலவச தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.