பிஎஸ்எல்வி சி-62 தோல்வி எதிரொலி: ககன்யான் ஆள் இல்லாத சோதனை ராக்கெட் காலதாமதம்? - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இஸ்ரோ கடந்த 12-ந்தேதி விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்வியை தழுவியது.;

Update:2026-01-18 01:56 IST

கோப்புப்படம் 

சென்னை,

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் மூலம், 3 நாள் பயணத்திற்காக தரையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறைந்த பூமி சுற்றுப்பாதையில் 3 பேர் கொண்ட குழுவை ஏவி, பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் வருகிற 2027-ம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 3 ஆள் இல்லாத ராக்கெட்டுகள் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட உள்ளது. அதில் முதல் சோதனை ராக்கெட்டில் வயோமித்ரா என்ற பெண் ரோபோவும் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த ராக்கெட் வருகிற ஏப்ரல் மாத்திற்குள் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யப்பட இருந்தது. ஆனால் தற்போது, இஸ்ரோ கடந்த 12-ந்தேதி விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்வியை தழுவியது. இதற்கான காரணத்தை குழு அமைத்து இஸ்ரோ ஆய்வு செய்து வருகிறது. இதனால், சோதனை ராக்கெட்டை ஏவுவதை வருகிற ஜூன் மாதம் வரை தள்ளிப்போட வாய்ப்பு உள்ளது. ஆனால், ஜிஎஸ்எல்வி மார்க்-2 மற்றும் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவ தயாராக இருந்து வருகிறது. அத்துடன் தனியார் துறையினர் தயாரித்த பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டும் தயார் நிலையில் இருந்து வருகிறது.

முதல் சோதனை ராக்கெட் பயணத்தின்போது, பெண் ரோபோ வயோமித்ரா, விண்வெளி வீரர்களுக்கு முன்பாக விண்வெளிக்குச் சென்று ஆய்வுப்பணிகளில் ஈடுபட உள்ளது. இந்தப் பயணத்தில், மனிதனால் மதிப்பிடப்பட்ட ஏவுதள ராக்கெட்டின் காற்றியக்கவியல் தன்மை, சுற்றுப்பாதை தொகுதியின் பணி செயல்பாடுகள், மறு நுழைவு மற்றும் குழு தொகுதியின் மீட்பு ஆகியவை சோதிக்கப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்