கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.;
கன்னியாகுமரி,
இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதனால் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுபோல ஞாயிறு வார விடுமுறையையொட்டி இன்று அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.
அதனை தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்த்து ரசித்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.