தோரணமலை முருகன் கோவிலில் சுதந்திர தின கொண்டாட்டம்: மாணவ-மாணவிகள் பங்கேற்பு
யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது உள்ள குகையில் முருகன் கோவில் அமைந்திருப்பது சிறப்பாகும்;
தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது உள்ள குகையில் முருகன் கோவில் அமைந்திருப்பது இந்த தலத்தின் சிறப்பாகும்.
இந்த கோவிலில் இங்கு ஆண்டுதோறும் சுதந்தி்ர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சுதந்திர தினம் மற்றும் ஆடி மாத கடைசி வெள்ளி என்பதால் வர்ணகலச பூஜையுடன் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் பக்தர்கள் மலையில் இருந்து 21 குடத்தில் சுனைநீர் கொண்டு வந்தனர். அந்த நீரால் உற்சவர்கள் முருகன், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து வர்ணகலச பூஜை நடந்தது.
பூஜையில் தேசியகொடி வைக்கப்பட்டு அதற்கும் தீபாராதனை நடந்தது. இதனை அடுத்து பூஜையில் வைக்கப்பட்ட தேசியகொடி நடப்பட்டு இருந்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பக்தர்களே தேசியக் கொடியை ஏற்றினர். தேசியக் கொடி பறந்த நிலையில் அதற்கும் தீபாராதனை காட்டப்பட்டது. அனைவரும் கொடி வணக்கம் செய்தனர்.
இதில் முத்துமாலைபுரத்தில் உள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு மாலை நேர இலவசப் படிப்பக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள் வேடம் அணிந்து வந்திருந்தனர். சுமார் 40 மாணவ-மாணவிகள் இதேபோல் வேடம் அணிந்து வந்திருந்தனர். மேலும் தோரணமலையில் தங்கி போட்டித்தேர்வுக்கு படிப்பவர்களும் பூஜையில் பங்கேற்றனர். விழாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அதோடு தோரணமலையில் திருமணம் செய்த தம்பதிகளுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார். முன்னதாக அவர் பேசும்போது கிராமப்புற மாணவ-மாணவிகள் ஆங்கில அறிவு பெறவேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் மாலைநேர இலவச படிப்பகத்தினர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.