தமிழர்களுக்கு இறை வழிபாட்டை பா.ஜ.க. சொல்லித் தருவது வேடிக்கையாக உள்ளது - சீமான்

ஒற்றுமையாக இருக்கும் மக்களை பா.ஜ.க. பிரிக்க பார்ப்பதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2025-12-07 07:52 IST

கோப்புப்படம் 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல கோடி மக்கள் வீடுகளில் விளக்கேற்ற வழி இல்லாமல் உள்ளனர். ஆனால், பா.ஜ.க. திருப்பரங்குன்றம் மலை மேல் விளக்கு ஏற்ற வேண்டும் என்கின்றனர். இவர்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தார்கள். இந்த மலையை கல்குவாரியாக மாற்ற உத்தரவு பிறப்பித்தால் போராட வருவார்களா?

இன்றைக்குதான் முருகன் இவர்கள் கண்ணுக்கு தெரிகிறாரா? இவ்வளவு நாள் எங்கே இருந்தார்கள்? கடந்த ஆண்டு ஏன் வரவில்லை. 2 மாத்தில் தேர்தல் வருவதால் வருகின்றனர். ஒருங்கிணைந்த சமூகத்தை சேரவிடாமல் பிரித்து விடுவதுதான் பா.ஜ.க.வின் கோட்பாடு. திடீரென்று விளக்கு ஏற்றுவோம் என்பது தமிழ் சமூகத்திற்கு உள்ளே பிளவுகளை ஏற்படுத்தக்கூடியது. பா.ஜ.க. ஒற்றுமையாக இருக்கும் மக்களை பிரிக்க பார்க்கிறது. இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. தமிழக அரசு நினைத்திருந்தால் எப்போதோ இதை தடுத்து இருக்கலாம். ராமருக்கு மார்க்கெட் போய்விட்டது அதனால்தான் முருகனிடம் வருகிறார்கள்.

தமிழர்களுக்கு இறை வழிபாட்டை பா.ஜ.க. சொல்லித் தருவது வேடிக்கையாக உள்ளது. அவர்களுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் சாதி, மத பிளவு ஏற்படுத்துவது சாத்தியம் இல்லை. அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துவிட்டு இதுகுறித்து எதிர்த்து பேசுவார்களா? கூட்டணி வைத்துக்கொண்டு பா.ஜ.க.வுக்கு எதிராக சொல்ல வேண்டும் என்றால் எஜமான்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?.

மத்திய மந்திரி அமித்ஷா இந்திய மக்களின் ஒற்றுமை என பேசாமல் இந்து மக்களின் ஒற்றுமை என பேசுகிறார். அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பா.ஜ.க. தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது என்றால் பேராபத்து இருக்கிறது என அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்