கரூரில் 41 பேர் பலியான விவகாரம்: தவெக நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன்

கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-09 07:23 IST

மதுரை,

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். பலர் மயக்கம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரையும், வாகனத்தையும் த.வெ.க.வினர் சரமாரியாக தாக்கியதாக கரூர் போலீசார் பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் அடங்குவர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கவுதம் தனசேகர், அன்புமணி, செந்தில் குமார், சுப்பிரமணி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகாரில் முரண்பாடுகள் உள்ளன. விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி இருந்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

விசாரணை முடிவில், இதே வழக்கில் மற்ற சிலருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு மனுதாரர்களுக்கும் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது அவர்கள் சேலம் டவுன் போலீசில் 2 வாரத்துக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்