கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.;
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வேலுச்சாமிபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் சாலையோர கடை உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்ளிட்ட 306 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். சுமார் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஆஜரான 7 பேரில் 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்புப்பணியில் இருந்த 3 காவல் உதவி ஆய்வாளர்களிடமும் கரூர் சிபிஐ அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.