கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.;
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கடந்த 16-ம்தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த 19ம் தேதி தீபாவளி விடுமுறைக்காக சிபிஐ அதிகாரிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்குப்பின் சிபிஐ அதிகாரிகள் நேற்று கரூர் வந்தனர். இன்று காலை 10 மணியளவில் கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 5 மணிநேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு கயிறுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தியும், 3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலம் அளவீடு செய்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.