கரூர் கூட்ட நெரிசல்: த.வெ.க.வின் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.;
கரூர்,
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் கடந்த 22-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து கரூர் கோர்ட்டில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டு த.வெ.க. வக்கீல்கள் சார்பில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, த.வெ.க.வினருக்கு சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து த.வெ.க. வக்கீல்கள் முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்டனர். சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தான் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.