அனைத்து மாவட்டங்களிலும் குறள் வார விழா - தமிழக அரசு உத்தரவு

‘குறள் வாரம்’ நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன.;

Update:2026-01-02 21:29 IST

சென்னை,

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 31.12.2024-ம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் எனப் பெருமிதாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்திடும்பொருட்டு, 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “குறள் வார விழா” கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், திருக்குறள் நாட்டிய நாடகம்/இசை நிகழ்ச்சி; குறள் சார்ந்த ஓவியப் போட்டி/குறள் ஒப்பித்தல் போட்டி (பொதுமக்களுக்கு மட்டும்); கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம்/படத்தொகுப்பு/ஒளிப்படப்போட்டி; திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம்; அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் குறளாசிரியர் மாநாடு மற்றும் குறள் வினாடி வினா; ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை நிகழ்ச்சி ஆகியவை குறள் வார விழா நிகழ்ச்சிகளாக நடைபெற உள்ளன.

* சேலம், திருச்சிராப்பள்ளி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம் / இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

* தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம்/குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற உள்ளது.

* கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம்/படத்தொகுப்பு/ஒளிப்படப்போட்டி அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் வகையிலும் இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெற உள்ளது.

* மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

* சென்னை, மெரினா கடற்கரையில் 10.01.2026 சனிக்கிழமை அன்று ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது.

* திருப்பூரில் 21.01.2026 புதன்கிழமையன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள் (அனைத்து நிலைகளிலும்) ஆசிரியர்கள் (அனைத்து நிலைகளிலும்) பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு (ம) குறள் வினாடி-வினா நிகழ்ச்சிகள் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது.

திருப்பூரில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்குபெறும் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்திட ஏதுவாக திருக்குறள் சார்ந்த முதல்நிலைத் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் 09.01.2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் முதல் 30 மதிப்பெண்களைப் பெறுவோர் திருப்பூரில் 21.01.2026 புதன்கிழமையன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுவர். குறள் வினாடி வினாவுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பின்வரும் விரைவுத் துலங்கள் குறியீடு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்