தூத்துக்குடியில் ரூ.2.24 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி, அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் 161 பயனாளிகளுக்கு ரூ.2.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கூறியதாவது:
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நலவாரிய அட்டை வழங்குகின்ற நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து, இங்கு வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த நாள் மறக்க முடியாத நாள். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் தலைநிமிர வேண்டும் என்பதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து இருக்கின்ற தலைவர் மற்றும் ஒரு கால கட்டத்தில் செருப்பு அணிந்து நடக்க முடியாது, சாலையில் நடக்க முடியாது மற்றும் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை இருந்த ஒடுக்கப்பட்ட காலத்தில், மக்களின் உரிமைகளை பெறுவதற்காக பாடுப்பட்ட தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தான். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழியில் ஆட்சி நடத்துகின்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை அளித்து சிறப்பான பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். மற்றப் பகுதிகளில் இல்லாத வகையில் மக்களுக்காக இன்றைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, எண்ணற்ற மற்றும் வளர்ச்சி பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம், எல்லோருக்கும் சுதந்திரம், எல்லோருக்கும் அதிகாரம், எல்லோருக்கும் கல்வி என்று சிறப்பாக செயல்பட்டு வரும் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்களிடத்தில் வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், மாவட்ட மேலாளர், தாட்கோ ஜெனிஷிஸ் ம.ஷியா மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.